பழங்குடியினரின், மகாஸ்வேதா தேவி

F.A.M. சேவியர்

15th Aug 2018

A   A   A

இந்தியாவில் பிறந்த எத்தனையோ பேர் மக்களுக்காக உழைத்து இவ்வுலகை விட்டு மறைந்தாலும் மக்களின் நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்து இன்றளவும் வாழ்ந்து வருகின்றனர். அப்படிப்பட்டவர்களுள் ஒருவர்தான் மகாஸ்வேதா தேவி. வங்காள மொழியில் பெரும் எழுத்தாளராக தன்னை நிலைநிறுத்தி பீகார், மேற்குவங்காளம் மத்தியப் பிரதேசம் மாநிலங்களில் காடுகளில் வாழும் பழங்குடியினருக்காக, தன் எழுத்தையே ஆயுதமாக்கி போராடியவர் இவர். ‘எழுத்து ஒரு ஆயுதம். ஆனால், சவரம் செய்வதற்கானதல்ல’ என்பது இவரது கூற்று.

தற்போதைய வங்காள தேசத்தின் டாக்கா நகரில் 1926 ஆம் ஆண்டு பிறந்தார். கவிஞர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்களால் நிரம்பிய குடும்பம் அது. அம்மா தாரித்ரி தேவி எழுத்தாளர் மற்றும் சமூகச் செயல்பாட்டாளர். அப்பா மனிஷ் கதக் பிரபல வங்காளக் கவிஞர். இவரது அண்ணன்தான் புகழ்பெற்ற சினிமா இயக்குனர் ரித்விக் கட்டக்.

இவர் தனது ஆரம்ப கல்வியை டாக்காவில் ஈடன் மாண்டிசோரி பள்ளியில் ஆரம்பித்து, மேற்கு வங்காளத்தின் மிட்நாப்பூர் மிஷன் பள்ளி, சாந்திநிகேதன், பெல்டாலா பெண்கள் பள்ளி என தொடர்ந்தார். பின்னர் அசுதோஷ் கல்லூரியில் I.A பட்டமும், ரவீந்திரநாத் தாகூர் நிறுவிய விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தில் பி.ஏ (ஆங்கிலம்) பட்டமும், கல்கத்தா பல்கலைக்கழகத்தில் எம்.ஏ (ஆங்கிலம்) பட்டமும் பெற்றார்.

ரவீந்த்ரநாத் தாகூரின் சாந்தி நிகேதன் விஸ்வபாரதி பல்கலைக்கழகக் கல்வியும் அவரைச் செழுமைப்படுத்தியது. அப்போது விஸ்வபாரதி பல்கலைக்கழக மாணவர்கள் தாகூரிடம் நேரடியாகப் பேசி உரையாடும் சூழல் இருந்தது. தாகூர் அம்மாணவர்களை செடி நடவும், குளம் தோண்டும் பணிகளிலும் ஈடுபடுத்தினார். அவரது இயற்கை நேசம்தான், மகாஸ்வேதா தேவி பின்னால் வனங்கள் சார்ந்தும் அங்கு வசிக்கும் மக்கள் சார்ந்தும் எழுதவும், பேசவும், செயல்படவும் தூண்டியது. அங்கிருந்த மக்கள் நாடக இயக்கத்தின் மூலம்தான், வங்காளக் கிராமங்களில் உள்ள மக்களின் வாழ்க்கை நிலையை அவர் தெரிந்து கொண்டார். பின்னர் 1947 ல் வங்காளி மொழி நாடகாசிரியரும், நடிகருமான பிஜன் பட்டாச்சார்யாவை திருமணம் செய்து கொண்டார்.

1965 ஆம் ஆண்டு பிகாரில் உள்ள பலாமு மாவட்டத்திற்கு மகாஸ்வேதா தேவி பயணிக்க நேரிட்டது. பழங்குடியின இந்திய மக்கள் அனுபவித்து வரும் துன்பங்களை அங்கேதான் அவர் முதலில் கண்டார். வாங்கிய கடனுக்காக வாழ்க்கை முழுவதும் விவசாயக் கொத்தடிமைகளாக வாழும் ஏழை மனிதர்களின் நிலை அவரைத் துயரத்துக்குள்ளாக்கியது.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், பீகாரில் தங்களது பூர்வீக நிலத்தின் மீதான உரிமையைக் கோரி பீகாரைச் சேர்ந்த பழங்குடியினர் பிர்சா முண்டா என்பவர் தலைமையில் போராடிய சரித்திரத்தை ‘காட்டில் உரிமை’ என்ற நாவலாக எழுதினார் மகாஸ்வேதா தேவி. இவரது படைப்புகளில் சிறந்ததாகக் கருதப்படும் இந்த நாவல் அவருக்கு சாகித்ய அகாதமி விருதைப் பெற்றுத்தந்தது. 

சுதந்திர இந்திய மக்களும், நாட்டை ஆண்டு கொண்டிருந்த அரசுகளும் மறந்துபோன பழங்குடிகளின் நிலை பற்றி மட்டுமின்றி இந்திய சமூகத்தில் பெண்களின் நிலை குறித்தும் ஆழ்ந்த கலையம்சம் கொண்ட கதைகளை இவர் எழுதியுள்ளார்.

நூறு நாவல்களையும், இருபது சிறுகதை தொகுப்புகளையும் எழுதி வெளியிட்டுள்ளார். இவரது முதல் நாவல் 1956 ல் ’ஜான்சிர் ராணி’ என்ற பெயரில் வெளிவந்தது. ஜான்சி ராணியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எழுதப்பட்ட இந்த நாவலுக்கு தேவையான தகவல்களை திரட்ட ஜான்சி பகுதிக்கு பயணம் மேற்கொண்டு வழிவழியாக மக்கள் மத்தியில் சொல்லப்பட்டு வரும் தகவல்களையும், கிராமிய பாடல்களில் சொல்லப்பட்டுள்ள தகவல்களையும் திரட்டினார்.

1984ஆம் ஆண்டு, தான் பணியாற்றிய ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வுபெற்ற இவர், பின்னர் தன்னை ஒரு முழுநேர எழுத்தாளராகவும் சமூகப் போராளியாகவும் மாற்றிக்கொண்டார். கல்வி, அடிப்படை ஆரோக்கிய வசதிகள், சாலைகள், வருவாய் இன்றி காடுகளுக்குள் தாழ்ந்த வாழ்க்கை நடத்தும் பழங்குடிகளின் வாழ்க்கையைப் பற்றி செய்திக் கட்டுரைகளை பத்திரிகைகளில் எழுதினார். காவல்துறையினர், பண்ணையார்கள், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் அம்மக்கள் மீது நடத்தும் ஒடுக்குமுறைகளை புகார்களாக எழுதி மாநில அரசுகளின் மனசாட்சியை உலுக்கினார். இந்திய அளவில் அரசின் தாராளமயக் கொள்கைகளாலும், கார்பரேட் நிறுவனங்களாலும் கையகப்படுத்தப்பட்ட வனப்பகுதிகளும் அங்கு வாழும் பூர்வகுடிமக்களும் சூறையாடப்படுவதை முதலில் மக்கள் கவனத்துக்குக் கொண்டுவந்தவர் இவர்தான். முப்பது ஆண்டுகளாக மேற்கு வங்காளத்தில் இருந்துவந்த ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்ததில் இவரது பங்களிப்பு பெருமளவில் இருந்தது.

விவசாயிகளுக்கான பிரச்சினைகள் மற்றும் போராட்டச் செய்திகளை வெளியிடும் போர்டிகா பத்திரிக்கையை தனது தந்தைக்குப் பிறகு நடத்திவந்தார். நாடோடி பழங்குடி சமூகத்தினர் மற்றும் ‘குற்றப் பழங்குடிகள்’ என வகைப்படுத்தப்பட்டு காவல்துறையினரால் துன்புறுத்தப்படும் மக்களுக்கான புதான் செய்திப் பத்திரிக்கையையும் நடத்தினார்.

இவரது படைப்புகளை தழுவி பல்வேறு திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. 1968 ஆம் ஆண்டு ’சுங்குர்ஷ்’ என்ற இந்தி படமும், 1993 ல் ’ருதாலி’ என்ற திரைப்படமும், அதே ஆண்டு ’பயென்’ என்ற இந்தி திரைப்படமும், ஹஸார் சௌராசி கி மா என்ற திரைப்படம் 1998 லும், 2006 ல் மாட்டி மாய் என்ற மராத்தி மொழி திரைப்படமும், 2010 ல் கன்கோர் என்ற இத்தாலி மொழி திரைப்படமும், 2012 ல் உல்லாஸ் என்ற வங்காள மொழி திரைப்படமும் வெளிவந்தன.

இவரது இலக்கிய சேவைக்காக 1979 ல் சாகித்திய அகாடமி விருதும், 1986 ல் பத்மஸ்ரீ விருதும், 2006 ல் பத்ம விபூஷன் விருதும், இலக்கியத்திற்கான உயரிய விருதான பாரதிய ஜ்நன்பித் விருதை 1996 லும் இந்திய அரசிடமிருந்து பெற்றார். மேலும் 1997 ல் ரமோன் மகசெசே விருதையும், 2003 ல் பிரான்ஸ் தேசத்தின் செவாலியேர் விருதையும், தெற்காசிய நாடுகள் வழங்கும் இலக்கியத்துக்கான ‘சார்க் இலக்கிய விருது’ ஐயும், 2009 ல் சர்வதேச விருதானா புக்கர் விருதையும், 2010 ல் யாஷ்வன்ட்ரோ சவான் தேசிய விருதையும் பெற்றுள்ளார். 2011 ஆம் ஆண்டு மேற்கு வங்க அரசின் உயரிய குடிமகன் விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

சிறுநீரகம், நுரையீரல் தொற்று உள்ளிட்ட பிரச்சனைகளால் அவதியுற்ற அவர் 2016 மே மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிட்சை பலனளிக்காத நிலையில் 2016 ஜூலை 28 ஆம் தேதி மரணமடைந்தார்.

இவரது மரணத்தை குறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட இரங்கல் செய்தியில் ‘இந்த தேசம் ஒரு சிறந்த எழுத்தாளரை இழந்துவிட்டது; மேற்கு வங்க மாநிலத்தை பொறுத்தவரை போற்றுதலுக்குரிய தாயை இழந்து தவிக்கிறது. எனது வழிகாட்டியாக இருந்த மகாஸ்வேதா தேவியின் மறைவை எனது தனிப்பட்ட இழப்பாக உணர்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

சமூக நலனுக்காக எழுத்தாலும், செயலாலும் அயராது பணியாற்றிய மகாஸ்வேதா தேவியின் வாழ்க்கை வருங்கால இளைஞர்களுக்கு சிறந்த முன்மாதிரியாக திகழும் என்று நம்புவோம்.

 


அக்டோபர் 2017 அமுதம் இதழில் வெளியானது…



Error
Whoops, looks like something went wrong.